Tuesday, 27 December 2011

VALLALAR CINDHANIGAL

    ஓம்சிவாயநம
வள்ளலார் இன்றைய வாழ்வுக்குப் பொருத்தமானவரா!
                                   கவிஞர் பா.சத்தியமோகன்
அன்றிலிருந்து இன்றுவரை மனிதனின் சுயநலம் ஓயவேயில்லை. எதிலிருந்து எதைப்பெறலாம்.
எதைத்தேடினால் எது கிடைக்கும் என்பதே அவன் நாட்டம். அப்படி எனில் சுயநலம் தவறான விஷயமா?
 சுயநலத்தால் நன்மையே கிடைக்காதா? சிந்திக்கும்போது ஒன்று தோன்றியது.
தென் ஆப்பிரிக்காவில் தனது வழக்கு ஒன்றினுக்காக வாதாடப்போன அண்ணல் காந்தியடிகளை வெள்ளை இனத்தவன்
அந்த இரயில் பெட்டியிலிருந்து முதல்வகுப்பு டிக்கட் வாங்கியிருந்தும் நள்ளிரவில் பலவந்தமாய் இறக்கிவிடப்பட்டு
அவமானம் பெறாவிட்டால், அந்த உன்னத மனிதரின் சுயமதிப்பு சேதப்படுத்தப்படாவிட்டால்,
கறுப்பின மக்களின் விடுதலைக்கு பிள்ளையார் சுழி இல்லை.
           உண்மையில் என்ன நடந்தது?
 நாமாக இருந்தால் எனது இரயில்பெட்டியின் செளகரியமான பயணம் தடைப்பட்டு விட்டதே என்கிற சுயநலமோடு கோபப்பட்டிருப்போம்.
அநேகமாக பயணம் முடிகிற வரையில் நீடிக்கிற, சிலமணிநேர வருத்தம்கலந்த சுய பச்சாதாபமாக வலுப்பெற்ற  சிறிய கோபமாக இருந்திருக்கும்.
அண்ணலோ என்னைப்போல இதுபோல எத்தனை எத்தனை இந்தியர்கள் இங்கே அவமானப்படுத்தப்படுகிறார்களோ
என்று தன் கோபத்தை பொதுநலமாக்கினார். விடுதலை பிறந்தது.
இன்றைய 2011கால கட்டத்தில் “அன்பு” என்கிற சொல்லையும் பண்பையும் நாம் நமது சுற்றத்திற்கும் உறவினருக்கும் மட்டுமே பயன்படுத்துகிறோம்.
இது சரியா? முறையா? மனிதத் தனமா ?
 தன் வீடு, தன்மக்கள் , தன் பெண்டிர், தன் சுற்றம் என்கிற கடுகு உள்ளம் நன்மைதருமா?
தன்வீட்டுக்கு குடிநீர் வரவில்லை என வருந்துகிறவன், ஊருக்கு மழை வரவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டால் எத்தனைபேர் பயன் அடையலாம்!
அன்பு என்கிற பண்பை தன்மீதும் தன் சொந்தம் மீதும் மட்டுமே காட்டுவோரே! கொஞ்சம் திரும்புங்கள்.
அன்பைபெரிதாக்கிப் பாருங்கள். அகலமாக்கி உயர்த்துங்கள். என்ன கிடைக்கும்? அன்பெனும் பிடியில் மலையே கிடைக்கும்! அகப்படும். அன்பு  என்னால் குடிசை அளவுக்குத்தானே பெரிதாக்க முடிந்தது என்கிறீர்களா. அதில் இறைவன் எனும் அரசனே வந்துவிடுவார். அன்பெனும் வலை வீசுங்கள், பரம்பொருளே கிடைப்பார். அன்பாகவே உங்கள் மாறிவிட்டனவா? அதில் அமுதமாக அமர்வார் ஈசன். மட்பாண்டத்தால் ஆன பானை அளவுக்கு அன்பு இருந்தாலும்போதும் அதில் பொங்கும் கடல்போன்ற ஈசன் அடங்குவார்.
 அட! அன்புதானப்பா உயிர். அன்பு உயிரில் வெளிச்சம்தானப்பா அறிவு..
அன்பு உன்னிடம் அணு அளவு இருந்தாலும் போதும் அதில் பெரிய ஒளி ஒன்று அமைந்திருக்கும்.
அப்படியானால் பரம சிவம் எப்படி இருக்கும்?
அன்புக்கு உருவம் கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்!
இத்தனையும் சொன்னார் எக்காலத்திற்கும் பொருத்தமான வள்ளல் பெருமான்! 


1 comment:

  1. வள்ளலாரை என்றென்றும் கைக்கொண்டால் வாழ்வு
    வளமடையுமே ! அன்பே சிவமென அழகாய் நிறுவி விட்ட பதிவு!

    ReplyDelete