*****************
தண்ணீர் நிலநலத்தால்; தக்கோர் குணம்கொடையால்;
கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல்; கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.
********************
மனிதர்களே
கடல் சூழ்ந்த இந்த உலகில் எது அற்புதம் என்று என்றாவது எண்ணிப்பார்துள்ளீர்களா? அற்புதமானவை மூன்று.
தண்ணீர் தாகம் தீர்க்கிறது சுவையாக இருக்கிறது குளிப்பதற்கும் ஊண்ணவும் பயன் படுகிறது என்றெல்லாம் மகிழ்கிறீர்கள்; ஆனால் அதன் சுவையும் பயனும் அத்தண்ணீர் சார்ந்திருக்கும் நிலத்தின் தன்மையைப் பொறுத்ததே ஆகும்.
மேலோர் ( தக்கோர்) குணம் எதனைக் கொண்டு அறியப்படுகிறது? எந்த செயலைச் செய்யும் வரையில் அவர்கள் மேலோர்கள்? என்றெல்லாம் சிந்தித்தால் அது அவர்கள் கொடைப் பண்பினால் ( பிறருக்குத் தரும் பண்பு) இருக்கும்வரியில்தான் அவர்கள் மேலோர்கள்.
கண்களின் ஒளி ( நீர்மை) எதனைக் கொண்டு அறியப்படும் என்றால் கருணை குணம் கொண்டே ஒருவர் கண்களின் ஒளியை அறியலாம்.
பெண்களின் நீர்மை ( அழகு) எதுவரையில் என்று கேட்பீர்களானால் அழியாத கற்பின் ஆற்றல் இருக்கும் வரையில்தான் பெண்களின் அழகு போற்றப்படும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக அற்புதங்கள் மூன்றை அறிந்தோம். மகிமை எண்ணி விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***
பாடல்:17
************
செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் ? - வையத்து
அறும்பாவம் என்ன அறிந்தன்று இடார்க்கு; இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்?
மனிதர்களே.
செல்வத்துக்கு ஏங்காதவர்கள் கிடையாது. இருநிதியம் (சங்க நிதி, பதும நிதி) என்பதுபோல் அள்ள அள்ளக் குறையாத செல்வத்தின்மேல் எல்லோருக்கும் ஆசைதான்.ஆனால் செய்தீவினை ( செய்த, செய்யப் போகிற, செய்துகொண்டிருக்கிற தீவினைகள்) இருக்கும்போது தெய்வத்தை நொந்துகொள்வதில் என்ன பயன் இருக்கிறது?
இல்லாருக்கு தருமம் செய்வதினால் பாவம் அறுந்துபோகும் என்பதை அறிந்து அன்று ஏதுமற்றோருக்கு தருமம் செய்யாமல் பிச்சை இடாமல் இன்று செல்வம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது எதற்கு சமம்?
வெறும் பானையில் தண்ணீரும் ஊற்றாமல் அரிசியும் போடாமல் அது பொங்கி வழ்யும் என்று எதிர்பார்ப்பதற்குச் சமம்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக பணம் சேவதன் அடிப்படை எதுவென அறிந்தோம். விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***
No comments:
Post a Comment