Saturday, 20 December 2025

 பாடல்:23

******************************

கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்

பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே - வில்பிடித்து

நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே

சீர் ஒழுகு சான்றோர் சினம்.


மனிதர்களே!

வாழ்வில் அடிக்கடி சந்திக்கிறோம் கோபம் என்ற உணர்ச்சியை. 

ஆனால் கோபப்பட்டு முடித்த உடன், சிந்திப்பீர்களா  எப்படிப்பட்ட கோபம் வந்தது என்று.

கோபப்பட மட்டும்தான் தெரியும், அதற்குப்பிறகு எதிராளி கோபம் கொண்டு இன்னும் பெரிதாவதுதான் தெரியும் என்கிறீர்களா.

என் மூதுரையைக் கேளுங்கள்.

மூன்று வகை கோப வகை உண்டு.

கல் கோபம், தங்கக் கோபம், நீர்கோபம்.

அவை என்ன? சொல்கிறேன். 

தீயவர்கள், மூடர்கள் கொள்ளும் கடும் கோபம் கல் பிளந்தது போல மீண்டும் ஒட்ட முடியாத பிரிவை உண்டாக்கும். இணைப்புக்கு சாத்தியமில்லாத கோபம் , கல் கோபம்.

சமமான, சற்று உயர்ந்த (நடுத்தரமானவர்களின் கோபம்) கோபம், பொன்னில் ஏற்பட்ட  பிளவு போன்றது. தானாக இணையாவிட்டாலும் அதனை உருக்கி மீண்டும் இணைக்க வாய்ப்பு உள்ளது என்பதுபோல சிலர் முயற்சியால் அவர்கள் இணைவார்கள். இது தங்கக் கோபம்.

நீர்க்கோபம் என்றால் என்ன? பெரிய வில்லில் அம்பைப் பொருத்தி குளத்து நீரில் அல்லது நீர் நிலையில் அந்த நீர் கிழிவது போல அம்பு விடுங்கள். என்ன ஆகிறது? நீரில் உண்டாகும் அப்பிளவு சற்று நேரம் கூட நீடிப்பதில்லை. பிறர் நல்லகுணங்களைப்  போற்றி வாழும் பெருமை மிக்க சான்றோர் மனம் கொள்ளும் கோபம் உடனே மாறிவிடும் தன்மை கொண்டது. இதுவே நீர்க் கோபம்.

செய்ந்நன்றி அதிகாரத்தில் (குறள்:109 ல் இல்லறவியல்) ஒரு குறள் இவ்வாறு பேசுகிறது:

கொன்றன்ன இன்னாசெய்யினும் அவர் செய்த ஒன்று

நன்று உள்ளக்கெடும்.

முன்பு ஒருவர் நன்மை செய்தார். இப்போது கொன்றது போன்ற தீமையைச் செய்கிறார்.இப்போது என்ன செய்ய வேண்டும்? அவர் முன்பு செய்த ஒரு நன்மையை நினைத்துப்பார்த்தாலும் போதும். அந்த நிமிடமே அவர் செய்த துன்பம் மறைந்துவிடும்.

நீர்க்கோப நிலைக்கு நம் மனதை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

இது ஒளவைப்பாட்டியின் மூதுரை.

No comments:

Post a Comment