Wednesday, 20 January 2016

அவளுக்கென்று ஒரு சிலையுமில்லை

(லாவண்யாவுக்கு)
அவள் காலையின் முதல் கிரணம் விழித்து
வேலைப்பட்டியலின் அழுத்தத்தில் ஏறி
இரவில்
மனபளுமிக்க கவலைப்படுக்கையில் வீழ்வாள்
குடும்பம் குடும்பம் குடும்பம்
என்பதே நினைப்பாகி
வயோதிகம் வாழ் என் அன்னைக்கும் அன்னையாகி
 உணவு உப்புக்கல் என துணை ஆவாள்
அவள் சத்து மாத்திரைகள் உண்ணும் நிலை வந்தும் மறந்தாள்
காலை முதல் இரவு தாண்டியும் இயங்கும் கருவி ஆனாள்
அவள் தலை நோவு கூட அவள் உணரவோ
மருந்து எடுக்கவோ நேரமிலாது ஆனாள்
பிறர் நல்ல விஷயங்களை
தேடித் தேடிப் பாராட்டும் அவள் நல்ல குணத்தை
நான் பாராட்ட நேரமெடுப்பதே கிடையாது
 மீனாக மானாக பறவையாக அன்பு இசைக்கருவியாக
என் வாழ்வின் பாதிதூரம் தாண்டியும்
மூச்சிரைக்க ஓடி வருகிறாள் இனியும் துணை வருவாள்
அவளுக்காக சிலை வைத்தாலும்
அதற்கும் உழைக்க செலவழிக்க
அவளே துணை  என்ற நிலை எனக்கு என்பதால்
சிலை வைக்க பூசலார் போல் மனதால் சிலை வைத்தேன்
வார்த்தையின்றி அவள் முன் மவுனச் சிலை ஆனேன்.

 

No comments:

Post a Comment