Friday, 21 November 2025

 ஆகாய மின்னல் நல்லவங்களான்னு லைட் அடிச்சுப் பார்க்குது


பல் செட் கீழே விழுந்தாமாதிரி எல்லாம் காலியாகி 

மழையாக கீழே உதிர்த்துவிட்டு 

ஒரு வெற்றிடமாய் இருக்கிறாய் ஆகாயமே நீ இன்று.

வானமே நீ என் தாத்தா மாதிரி தோணுகிறாய்.

வேட்டியை சரியாக கட்டாமல்

தோட்டத்தில் அலைகிறது மாதிரி 

உன் மேக வேட்டியை திரிய விடுகிறாய்.

ராத்ரியெல்லாம் - ஒரு பத்தரை மணி

ஒரே மின்னல் காடாக்கிவிட்டாயே ஏன்.

ஞானியர் உலகத்தில் பாயும் நல்லொளி மாதிரி இருந்தது அது.

மூணு வயசு அபி பாப்பா  

பாயில்  போர்வையில் நத்தை மாதிரி சுருண்டு கொண்டு;

“ஏம்பா .. நம்மள எல்லாம் நல்லவங்களான்னு 

சாமி லைட் அடிச்சுப் பார்க்கிறாரான்னு” கேட்டது.

நான் என்னத்தைக் கண்டேன்!

சரடு சரடாக இங்கிலீஷ்ல “Y” எழுத்து போடறா மாதிரி 

கம்பி கம்பியாத் தெரியற 

மின்னல் கோட்டைப் பார்த்ததும் 

அது மறைஞ்சதும்

வயதான தாயின் நடுமண்டையில ஓடற

வெள்ளைமுடிக் நரைக்கற்றை ஞாபகம் வந்தது

உண்மையிலேயே மின்னல் வரும் போது

கண்ணை மூடிக்கிற பய புத்தியைக் கழுவறத்துக்கு

கடையில சோப்பு இருக்கா தெரியலை.

ஆனா மேகமே..

இந்த அறை கூட 

சில்லுன்னு ஆயிட்டுது

ராத்திரியெல்லாம் பெஞ்சு வச்சிருக்கே!

தோட்டமெல்லாம் தார் ரோடெல்லாம் ஈரம்.

மைனாக்குருவி

ஒன்னு இறக்கை நனைஞ்சிருந்தது

ராபின் நாய்க்குட்டி கூட சாக்குல சுருண்டு கிடந்தது.

கண்ணு கூட அரைக்கண்ணுதான் திறக்குது

சுதந்திர தினம் இன்னும் இரண்டு நாள்ல வருது

மேகமே உனக்கு கேட்குதா இந்தியாவின் சந்தோஷ சத்தம்?

***


Friday, 14 November 2025

 பனியன் போட்ட குருவி


குழந்தைகள் வருணிக்கும் அழகில்

கவிதை வார்த்தைகளை  நான் எழுதுவதில்லை

குழந்தைகள் காட்டும் மஞ்சநாத்தி

பாம்பும் வந்தால் கத்தும் நொள்ளான்

குதிரைக் கொண்டை போட்டிருக்கும் வெண் கோரைகூட்டம்

முள் கம்பி வேலியைச் சிறகால் போர்த்தும் நாரைகள்

குளிரில் 

குழந்தை அபி சொன்னாள் “பனியன் போட்ட குருவி!” 

ஓ ! மரங்கொத்தி குருவி! 

பெயரற்ற அழகுடன் 

பெயர் புரியா வான் பார்க்கும்

மின்கம்பி அமர் குருவிகளுக்கு என்ன பெயரோ என்றேன் 

தொப்பிக்குருவி என்றாள் குழந்தை அபி

மடக்கி வைப்பேன் 

கவிதை எழுதக் கொணர்ந்த தாளை.

***



 கவலை விடுபடல்

இத்தனை பெரிய ஊரில்

யாருமில்லை என் வீட்டைப் பாதுகாக்க

ஒவ்வொரு சேமிப்பும் ஒவ்வொரு பொருளையும்

தனியே விட்டு ஊர் கிளம்ப

குசுகுசுக்கும் பயம் நெருடிற்று

செம்பருத்தி தனியே வீழுமே

தோட்டம் நீரற்றுக் காயுமே

ஒட்டடை குமிந்து கூடுமே பூட்டுகளை நம்பியா

ஒரு ஒரு மனிதனும் வீட்டைத் 

தனியே விட்டிட அஞ்சுகிறான் ?

குனிந்து கிழவி போல  கொல்லைப்புற மாமரம்

ஓரோர் இலை போடும் சப்தம் கேட்கும்

நண்பர் வந்து ஏமாறுவர் சப்தம் கேட்டு!

வீட்டைப் பாதுகாக்க 

யாரேனும் தோழனை

இரவிலே படுக்கச் செய்யும் ஏற்பாடுகள் தோல்வி

அவரவர்க்குள்ளும் ஆயிரம் முட்கள்

ஆயிரம் காரணங்கள் கூறி தட்டிக் கழிக்க

பூட்டிய வீட்டை தனியே விட

பயச்சங்கிலி தாக்கும்போது 

நீண்ட வெகு நீண்ட

காலங்களுக்குப் பிறகும்

தொங்கும் சருகுக் குப்பை என அலட்சியமாய்

எடுத்துப் போடாமல்

நான் விட்டிருந்த கூடு நோக்க நேர்ந்தது!

தன் கூடு இருக்கிறதா என்று பார்க்க சீறிப்பாய்ந்து

கூரை கீழே காற்றில் பளபளத்தது 

அந்த மஞ்சள் மார்புக் குருவி ஓ! கடுகுக்கூர் அலகினால்

உள் சன்னல் வழியே அதன் கண் காணக்கிடைத்தது.

“வீட்டைப் பாதுகாக்க ஆள்வந்தாயிற்று”

விட்டு விடுபடலானேன் எனக்கென்ன மனக்கவலை!

***


 ஆன்மிகம்



பறவைகள் எதுவும்

பறக்கும் போது

கால்களை மடக்கிக் கொள்கின்றன

உள் நோக்கி மடங்கும் தருணம்

வெட்டவெளி ஒன்று விரியும்.


***


Thursday, 13 November 2025

 பரிகாசத்துக்குரிய முட்டை



பிடி நழுவ எது மூலம்  எனத் தெரியவில்லை

பிடி கொள்வதற்கும் காரணம் சரிவர இல்லை

ஒரு செடியாய் மாறினால்

சில மண் வெட்டிகளுக்கும்

ஒரு மரமாய் மாறி நின்றால்

கூர் அரிவாளுக்கும்  பலியாகும் நிலை என்பதால்

ஒரு பறவையாய் மாற எத்தனிக்கும் கணத்தில்

எனது பெருவிருப்பத்தின் முட்டையை

ஒரு மின்மினி உடைத்ததெனில் யார் தான் நம்புவார்கள்

சத்தமில்லாத 

அந்த உடைந்த கணத்தை

பறந்து கொண்டிருக்கும் எந்தப் பறவையும் அறியாது

இப்போது போலவே.


***


Wednesday, 12 November 2025

 


காபிக்கடை 

காபி : 2

13.11.2025 வியாழன். 


கவிதைக்கு கிடைக்கும் மொழி மட்டுமல்ல அதன் சூழலும் தளமும் கூட மாறிக்கொண்டே வந்துள்ளது. கவிஞன் சுட்டும் தலைவி ஒருத்தி அகநானூறு பாடல்கள் ஒன்றில் தலைவன் தன்னை அடைந்து மனம் செய்துகொள்வானா என்ற ஏக்கமுடன் உள்ளாள்.அவளுக்கு தைரியமும் தலைவன் மீது நம்பிக்கையும் வருவதாக ஒரு சூழல் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தோழியே! நேற்றிக்கு நடந்த சிரிப்பதற்கு இடமான செய்தி ஒன்றைச் சொல்கிறேன் கேள் என்று ஆரம்பிக்கிறது அப்பாடல்.(அகநானூறு/கபிலர்/பாடல்:248/புலியூர்கேசிகன் உரை)

வேடர்கள் பன்றி வேட்டைக்குச் செல்கிறார்கள். வேட்டை நாய்கள் பன்றிகளை பயமுறுத்தின. தொங்கும் முலைகளைக் கொண்ட தனது  பெண் பன்றியைக் குட்டிகளுடன் காப்பாற்ற ஆண்பன்றி அந்த வேட்டை நாயை எதிர்த்து விரட்டுகிறது. அதுமட்டுமல்ல, வேட்டைக்காரனுக்கும் அப்பன்றி தனது எதிர்ப்பைக் காட்டி தடுக்கிறது. வேடுவனும் கூர் அம்பை எய்யாமல் அகல்கிறான்.

இச்செய்தி என்ன குறிக்கிறது? பழி போடுவது வேட்டை நாய்கள் போன்ற மனிதர்களின் கூட்டம். அதனை எதிர்த்து விரட்டுகிறது உன் தலைவன் நாட்டுப் பன்றி.  அதுமட்டுமல்ல, அம்பு எய்து துன்பம் தருவதற்கு வேடர்களும் வந்தாலும் நேருக்கு நேர் சமாளிக்கிறது தலைவன் நாட்டு ஆண் பன்றி.

நிகழும் எளிய சம்பவங்களில் வாழ்வுக்கான நம்பிக்கை பெறும் காட்சி ஒற்றுமை அக நானூறு இலக்கியத்தில மட்டுமல்ல இன்றைய புதுக்கவிதையிலும் காண முடிகிறது.

எல்லா நிகழ்விலும் நாட்டின் வளம் பேசப்பட்டது அன்றைய கவிதை மொழியில். இன்றைய கவிதை மொழியில் சுயம் இழப்பு; அடையாளம் இழப்பு சுட்டப்படுகிறது. 


Saturday, 13 September 2025

 காபிக்கடை 

காபி :1 

13.9.2025 சனிக்கிழமை. 

சென்னை நகரம் புதிது. பழக்கம் இல்லா மனிதர்கள். பணமே பிரதானம்,வியாபாரமே நோக்கம். 

பணம் இல்லையா அப்படியெனில் என்னைப் பார்க்காதே என்று சொல்வது போல் எங்கும் விரையும் மனிதர்கள் நெரிசல். 

எப்படித்தான் இங்கு தொடர்ந்து வாழ்வதோ - காலம் தள்ளுவதோ -என்ற கவலையோடு  கடந்துபோனது செப்டம்பர் 5.9.25உடன் ஒரு வருடம்.

காலை சந்தடிகளிலும் சைக்கிளே என் தேர்வு. மெல்ல ஒரு பெட்டிக்கடையில் ஸ்டேண்ட் போட்டு நிறுத்தினேன்.

தயிர் ஒரு லிட்டர் ஆவின் ஒரு  லிட்டர் மற்றும் ஒரு வாராந்தரிக்கு ரூபாய் 125/- ஆயிற்று.

என்னமோ தெரியவில்லை. வானம் மப்பினால் செல் டவர் கிடைக்கலியோ.

கடைக்காரருக்கு பணம் செல்ல மறுத்தது. செல்போன் சுற்றி சுற்றி வந்தது.

பணம் செலுத்தாமல் நான் தயிரையும் பாலையும் எடுக்கவில்லை. அதற்குள் -

“ அலோ என்னங்க! காசு தராம தள்ளி போயி நிக்றீங்க?” என்ற குரலையே எதிர்பார்த்தேன். 

காரணம் நிற்க இடமில்லா சென்னை அவ்வளவு பிசி. பண அவசரம். நிதியே குறிக்கோள். இங்கு இருப்பவர்கள் அறிவர். அல்லது தலை நகர சுழற்சி.

இதே போல் முன்பு ஒரு பெட்டிக் கடையில் தயிர் இருபத்தி ஒரு ரூபாய் என்றார். என்னிடம் ஒரு ரூபாய் இல்லை என்றதும் தயிரை எடுத்து ப்ரீசரில் வைத்து வழி அனுப்பி விட்டார். 

அந்த கசப்பே நினைவில் நின்றதால் இப்பவும் எதிர்பார்த்தேன் இவரிடமும்.

அவர் சொன்னார்: “ செல் டவர் இல்லேன்னா நாளக்கு கொடுங்க”

ஆச்சர்யம் அடைந்தேன்

“இல்லேன்னா நாளன்னிக்கு கொடுங்க!”

இளம் காலையில் இன்னும் ஆச்சரியப்பட்டேன். அவரும் என்னைப் போலவே வேட்டி கட்டியிருந்தார். ஏதோ முனகியது போலிருந்தது.

என்ன? என்றேன்.

“ பணத்தை பார்த்துக்கிட்டேவா பிறந்தோம்!”

ஆச்சரியப்பட்டுப் போனேன்.

உயிருள்ள உலகம் ஆழத்தில் இருக்கத்தான் செய்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

உங்கள் கருத்து என்ன என்று அறிய ஆசைப்படுகிறேன்.

அடுத்த காபியில் சந்திப்போம்.

***